search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்காரா அணை"

    புலி அணையில் குளித்த காட்சியை படகில் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பைக்காரா அணை. வனப்பகுதிக்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையை சுற்றி பார்க்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    வனப்பகுதிக்குள் இருப்பதால் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அப்படி கரையின் ஓரமாக நின்று தண்ணீர் குடிக்கும் வனவிலங்குகளை அங்கு படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் பிடித்து மகிழ்வார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்காரா அணைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அணையின் நடுவே புலி ஒன்று உற்சாகமாக தண்ணீரில் மூழ்கி குளித்து, ஆனந்தமாக விளையாடி கொண்டிருந்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக புலி அணையில் உற்சாக குளியல் போட்டது.

    படகு தான் இருக்கும் இடம் நோக்கி வருவதை உணர்ந்ததும் புலி உடனடியாக அணையில் இருந்து வெளியேறி வனத்திற்குள் சென்று மறைந்து விட்டது. புலி அணையில் குளித்த காட்சியை படகில் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர். உடனடியாக தங்கள் செல்போனை எடுத்து அதில் புலி உற்சாக குளியல் போட்டதை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து கொண்டனர். பின்னர் அதனை தங்களது சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் பரப்பினர். தற்போது இந்த வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது.


    ×